Sunday, May 20, 2012

எது எடுக்கப்பட்டதோ அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது



தீச்சொல்  பேசிய 
குழந்தையை மிரட்டி 
கண்டித்து 
அடித்தும் 
அடங்காத கோபத்தில் 
தவறி 
வந்து விழுகிறது 
அதே
 தீச்சொல்!

Saturday, May 19, 2012

ஏனோ?



கதிர் கொறிக்கும் 

காக்கை விரட்ட 

சட்டை பேன்டில் 

சோளக்கொல்லை  பொம்மை-

காய்த்து சிவந்த கரங்களுடன் 

மடை திறந்து 

களை பறித்து 

காவல் காக்கும் அப்பனுக்கு 

கோவணம்!



Thursday, May 17, 2012

சன்னலினூடே ஒரு பயணம்


புளிமூட்டையென ஜனத்திரளினுள் நுழைந்து

அடித்துப் பிடித்து

சன்னலோர இருக்கையில் அமர்கையில்

திடுக்கிட வைத்தது அந்த ‘படீர்’ சப்தம்-

எட்டு வயது சிறுவனொருவன்

தன் கையே தனக்குதவி என

முதுகில் அடித்துக் கொண்டு

பிச்சை கேட்கிறான்

விட்டெறியும் காசு

‘ஜல்’ என்று தரையில் விழ

அவன் ‘படீர்’ சுதி சேர்கிறான்

என்ன கொடுமை இது

இதை எல்லாம்

முழுமையாக காணக்கூடாது என்றுதான்

சன்னலுக்கு கம்பிகள் வைத்தனரோ?
என்று எண்ணத்தில் தோன்ற 

“குழந்தை தொழிலாளர் முறையை  ஒழிப்போம்” என்ற

போஸ்டரை தாண்டி வேகமெடுக்கிறது பேருந்து!

இதை ஒழிப்பது எங்ஙனமோ என்ற

ஏக்கத்துடன்

சாலையோர புளிய மரங்களும்

என் நினைவுகளும்

அவனை நோக்கி ஓட

எதிர் திசையில் தொடர்கிறது பயணம்!

Sunday, May 13, 2012

கனவாகவும் இருக்கலாம்


தனித்த இரவுகளில் 

நீடித்த சிந்தனைகளில் 

எடுத்திட்ட முடிவுகள் 

திட்டமிட்டு 

திருத்தி அமைத்து 

செயல்படுத்திட 

வெற்றியின் விளிம்பில் 

விழிப்பு !


Saturday, May 12, 2012

கண்ணாடி


தூசு படிந்த 

கண்ணாடியைத்

துடைக்க துடைக்க 

மெருகேறும் -

முகம்!


சிரிக்கும் போதும் 

கோபப்படும் போதும் 

மற்றவர்கள் கவனிக்கும் போதும் 

மனப்பிரமைக்குள் 

அழகாக நான் -

கண்ணாடி பார்க்கும்வரை!

Sunday, May 6, 2012

அடக்கம்



என்னதான் 
வானையே அளந்தாலும் 
தன் சிறகுகளை 
சுருக்கி தான் வைத்துக்கொள்கிறது 
சிட்டுக்குருவி !


Saturday, May 5, 2012

வினோதம்



என்னதான் படித்திருந்தாலும் 
கைநாட்டு 
வைத்தால் தான் 
வருகையை பதிய முடிகிறது 
எங்கள் அலுவலகத்தில் -
பயோ மெட்ரிக் எந்திரம்!