Monday, January 23, 2012

நிதர்சனம்



சில சமயங்களில்
நம்
விருப்பத்திற்கு மாறாக
சில நிகழ்வுகள்
நிகழ்ந்து விட்ட
பின்பு தான்
தெரிகிறது- அவை
நமக்கு
சாதகமானவை என்று!

நடப்பவை
நமக்கானவை இல்லாவிடினும்
நல்லவை என்பதில்
நிறைகின்ற மனம் -
அறிவு,
திறமை,
சாதுர்யம் என
அனைத்தையும்
விஞ்சி நிற்கின்றது!




Friday, January 20, 2012

மீண்டும் குழந்தையாவோமா?



கருவறையின் வெதுவெதுப்பு அனுபவித்து

அன்னையின் அரவணைப்பு தாண்டி

கிலுகிலுப்பை ஒலியினை இசைத்து

நடைவண்டி பாதைக்கு இசைந்து

நிலவினை அப்பமாக்கி உண்டு

விண்மீன்களுக்கு தூண்டில் போட்டு

தும்பிகளும் வண்ணத்துப் பூச்சிகளும்

எண்ணத்தை கொள்ளை கொள்ள

விரட்டிப் பிடித்துவீதியிலே திரிந்து

விழியிலே நிறைந்து வீணை தந்திஎன

விரும்பி  மீட்டப்பட்டு

விஷமங்கள் யாவையும் 

விளையாட்டாகவே விரும்பப்பட்டு 

விண்வெளியில் பறந்த - அந்த 

சிறு பருவம்  குறு பருவமாக  

குறைந்து போய் விட

என்னில்

இன்னும்   மீதமிருக்கும்

அந்த பருவத்து செய்கைகள்

எவராலும் விரும்பப்படாமல்
ஏளனமாய் போய்விட்டதில்
மீண்டும் பிறந்து
அந்த குழந்தை பருவத்தில் குதூகலிக்க
குறைந்தது எத்தனை காலமாகுமோ
என்று
நீங்காத ஏக்கங்கள் நெஞ்செங்கும்!



Tuesday, January 17, 2012

எழுதியாகணும்

                  
              ஒரு கதை எழுதியாகணும்! அதுவும் சிறுகதை சார்!
ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ, குங்குமத்திலோ,
 கல்கியிலோ வெளிவருகிற மாதிரி எழுதியாகணும்.

                  "ஒரு ஊரிலே கணேசன் என்ற பணக்காரர் இருந்தார்"
  என்று சிறுபிள்ளைதனமாக ஆரம்பித்தோ,

                  "வெளிர் ரோஸ் நிறவானில் உதைப்பட்ட பந்து போல்
சூரியன் போய் மறைவதை திக்... திக்...  மனதோடு பார்த்துக்
கொண்டிருந்த  கணேசனுக்கு இன்றைக்கெல்லாம் ஐம்பது
 வயதிருக்கும்" என்று ராஜேஷ்குமார் போல் ஆரம்பித்தோ,

                   "அதோ மெர்சிடிஸ் காரிலிருந்து சபாரி சூட்  சகிதம்
 இறங்கும் கணேசனை  உங்களுக்கு தெரியுமா?"  என்று
சுபா போல் ஆரம்பிதோ,

                 "
2012  ஜனவரி 7  கணேசன் கெமிக்கல்ஸ்              ஐம்பதின் எல்லையிலிருக்கும் கணேசனுக்கு காதோரம்
இருக்கும் நரை, முன் தலை வழுக்கை, சபாரி சூட் போன்றவை
அதிகம் தான்"  என்று ஆர்னிகா நாசர் போல் ஆரம்பிதோ,

எப்படியோ ,
                  ஒரு கதை எழுதியாகணும்! அதுவும் சிறுகதை சார்!
ஆனந்த விகடனிலோ, குமுதத்திலோ, குங்குமத்திலோ,
கல்கியிலோ வெளிவருகிற மாதிரி எழுதியாகணும்.






நட்பு கவிதை III



கல்லூரி வாழ்க்கை
கடந்து விட்ட பின்னால்
கிடைக்கும் தனிமையில்
கனவாகிவிட்ட இனிமையை
நினைத்து ஏக்கமுறும் மனம்!

வண்ணத்துப்பூச்சிகளாய்
வலம் வந்து விட்டு
கூட்டுப்புழுவாய்
சுருங்கி போன துள்ளல்!

சமுத்திரமாய் ஆர்ப்பரித்து விட்டு
சிறுதுளியாய் குறைந்து போன பலம்!

இவை எல்லாம்
உள்ளுக்குள் ஏதேதோ செய்தாலும்
உள்ளிருக்கும் பட்சி மட்டும்
ஒன்று சொல்கிறது
உலகம் உருண்டை என்று!

Tuesday, January 10, 2012

நட்பு கவிதை II

நிலவும் நட்பும்




வெகுதொலைவு நிலவு

வீட்டுகிணற்றில் மிதக்கும்

வெள்ளித்தட்டாய் -

வெகுகாலமாய்

புதுப்பிக்கப்படாமல்

காலம் கடந்த நட்பு

பார்த்த,

குரல் கேட்ட கணத்தில்

பளீரென மின்னுவதென்ன?



 

Saturday, January 7, 2012

நட்பு கவிதை I

 கல்லூரி முடிந்தபின்...


தொலைந்து போனவர்களாக
நண்பர்கள்

அலைந்து திரியும்
மனம்

விளைந்த நெற்கதிர்களை
தினம்

அளைந்து தேற்றும் காற்றாக
நம்பிக்கை!