Monday, February 1, 2021

பொருள் மீதான பொருளற்ற பற்று!


தேடி தேடி 
கடைசியில்
கிடைத்தே விடுகிறது
முன்பு எப்போதோ தேடி
மறந்து விட் டிருந்த பொருள்!
தற்போது தேடும் 
பொருளும் கிடைத்து விடக்கூடும் -
அதன் முக்கியத்துவம்
அற்ற ஒரு நாளில்!
பொருள் எப்போதும் அதே பொருள்தான்
அதன் மீதான
நாம் கொள்ளும் பொருள் மட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது!

Sunday, January 31, 2021

பிம்பங்களின் வாழ்க்கை



பிம்பங்களால் நிறைந்திருக்கிறது
வாழ்க்கை!
ஒவ்வொருவர் மீதும்
 ஒரு பிம்பம்
நமக்கும் இருக்க
நம் மீதும்
மகிழ்ச்சி பிம்பம்
உற்சாகத்தின் பிம்பம்
சோக பிம்பம்
அறிவு ஜீவி பிம்பம்
முட்டாள் பிம்பம் என
ஒவ்வொருவருக்கும் ஒரு பிம்பமிருக்கிறது;
அதற்கு ஏற்றவாறும்
சில சமயங்களில்
நாமும் நடக்க வேண்டிருக்கிறது!
சுயத்தின் தேடலில்
கண்ணாடி முன்
உற்று நோக்கலில்
நமட்டு சிரிப்புடன் 
நமது
ஏதேனும் ஒரு பிம்பமே
முன் வந்து நிற்கிறது!

கடைசியில்
வாழ்வது
நாமா
 நம் பிம்பமா
என்று தெரியாமலேயே
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

Sunday, January 17, 2021

காலம்

வெகு சிரத்தையாக
நேர மேலாண்மை குறித்து 
படித்துக் கொண்டிருந்தவனை பார்த்து
கைகொட்டி சிரித்தன -கடிகார முட்கள்!
மணி-
நள்ளிரவு பன்னிரண்டு!









 

சார்பு கொள்கை

 கால பெருவெளியில்

பிடித்த கணங்கள்
நொடிகளாக கரைந்து
பிடிக்காத கணங்கள் யுகங்களாக நீடிக்கும்
ஆனால்
கடிகார நொடிமுள்
நிமிடத்திற்கு
 அதே அறுபது சுற்றுதான் -
இவற்றுக்கு இடையே யான
சார்பு கொள்கையை
எந்த ஐன்ஸ்டீன் வந்து
இங்கே
கண்டுபிடிக்க?