Saturday, December 31, 2011

'தானே' புயல்


கரையின் கறைகளை
கழுவிக் களைகிறது
அலை

கைமாறாய்
தொட்டிலாய் மாறி
கடலை தாலாட்டுகிறது
கரை

என்றெல்லாம்

கடலை ரசிக்க

கடலோர  கவிதை படிக்க
முடியாமல் செய்து விட்டது -

கடலூரில்
புதுவையில்
'தானே' புயல் !

Sunday, December 25, 2011

ஏக்கம்



சொந்தங்களை
தொலைதூரத்தில்
தொலைத்துவிட்டு
நோட்டுக்களை எண்ணி
ஏக்கங்களை நீவி விட்டுக்கொள்கிறது
பிரிந்தோரது  மனது!


Friday, December 23, 2011

கவிதை



வெகுஜனம் தாண்டி
புரிந்ததென
அறிவுஜீவிகள் 
அகம் மகிழும்படி
புரியாததொரு கவிதை எழுத
முயற்சித்து முயற்சித்து
கடைசியில்
புரிந்து போகிறது
ஏதேனும் ஒரு
அர்த்தத்தில்!

Thursday, December 22, 2011

காக்கைத்தாய்



 குயில் குஞ்சை

தன் குஞ்சென்று

பாராட்டி சீராட்டி

வளர்த்ததால்

முதியோர் இல்லத்தில்

முடங்கி கிடக்கிறாள்-

காக்கைத்தாய்!


Wednesday, December 21, 2011

முன்வினை


மணற்பரப்பில்

வருவதும் போவதுமாக

ஏராளமான பாதச்சுவடுகள்

கலைத்துவிடக் கூடாதென

ஓரமாய் நடக்கலானேன்-

அப்படியிருந்தும்

 ஏனோ

துரத்திக்கொண்டு வருகின்றன

என்

இரு பாதச்சுவடுகள்!

Tuesday, December 20, 2011

இயலாமை




சந்திப்பு முடிந்த பின்னும்
தொடரும்
சந்திந்தவரை பற்றிய
பிரமிப்பை
அடங்கச் செய்கிறது-
பெருமூச்சு!

Monday, December 19, 2011

இயற்கை


மழைத்துளியும்

கண்ணீர் நிகர்ப்ப

இருப்பதால்

மேனிமீது படும்போதெல்லாம்

உருகுகிறது-

மனம்!



நிழலின் அருமையை

நிதம் உணர்த்தும்

சுட்டெரிக்கும் சூரியன்!

முகம் அறையும்  
பனிக்காற்றின் மீதுள்ள

கோபம்

காதுநுனி சில்லிப்பில்

காணாமல் போகும்  மாயமென்ன ?
  



இயற்கையோடு

இயைந்தது தானே

இனிய வாழ்க்கை!



ஆயினும்

கடையாணியான

சுற்றுசூழல் கழன்று விட்ட பின்னும்

காலச்சக்கரம்

சுற்றிக்கொண்டு இருக்கிறது

இன்னும் வேகமாக!

Saturday, December 17, 2011

எதிர் திசைப்பயணம்




                                                     பயணங்களில்
                                                     கண்ணயர்ந்து
                                                     இடம்மாறி இறங்குகையில்
                                                     தவறிய பயணத்தின்
                                                     வலியை கூறுகிறது –
                                                     எதிர் திசைப்பயணம்!


\