Saturday, December 31, 2011

'தானே' புயல்


கரையின் கறைகளை
கழுவிக் களைகிறது
அலை

கைமாறாய்
தொட்டிலாய் மாறி
கடலை தாலாட்டுகிறது
கரை

என்றெல்லாம்

கடலை ரசிக்க

கடலோர  கவிதை படிக்க
முடியாமல் செய்து விட்டது -

கடலூரில்
புதுவையில்
'தானே' புயல் !

Sunday, December 25, 2011

ஏக்கம்



சொந்தங்களை
தொலைதூரத்தில்
தொலைத்துவிட்டு
நோட்டுக்களை எண்ணி
ஏக்கங்களை நீவி விட்டுக்கொள்கிறது
பிரிந்தோரது  மனது!


Friday, December 23, 2011

கவிதை



வெகுஜனம் தாண்டி
புரிந்ததென
அறிவுஜீவிகள் 
அகம் மகிழும்படி
புரியாததொரு கவிதை எழுத
முயற்சித்து முயற்சித்து
கடைசியில்
புரிந்து போகிறது
ஏதேனும் ஒரு
அர்த்தத்தில்!

Thursday, December 22, 2011

காக்கைத்தாய்



 குயில் குஞ்சை

தன் குஞ்சென்று

பாராட்டி சீராட்டி

வளர்த்ததால்

முதியோர் இல்லத்தில்

முடங்கி கிடக்கிறாள்-

காக்கைத்தாய்!


Wednesday, December 21, 2011

முன்வினை


மணற்பரப்பில்

வருவதும் போவதுமாக

ஏராளமான பாதச்சுவடுகள்

கலைத்துவிடக் கூடாதென

ஓரமாய் நடக்கலானேன்-

அப்படியிருந்தும்

 ஏனோ

துரத்திக்கொண்டு வருகின்றன

என்

இரு பாதச்சுவடுகள்!

Tuesday, December 20, 2011

இயலாமை




சந்திப்பு முடிந்த பின்னும்
தொடரும்
சந்திந்தவரை பற்றிய
பிரமிப்பை
அடங்கச் செய்கிறது-
பெருமூச்சு!

Monday, December 19, 2011

இயற்கை


மழைத்துளியும்

கண்ணீர் நிகர்ப்ப

இருப்பதால்

மேனிமீது படும்போதெல்லாம்

உருகுகிறது-

மனம்!



நிழலின் அருமையை

நிதம் உணர்த்தும்

சுட்டெரிக்கும் சூரியன்!

முகம் அறையும்  
பனிக்காற்றின் மீதுள்ள

கோபம்

காதுநுனி சில்லிப்பில்

காணாமல் போகும்  மாயமென்ன ?
  



இயற்கையோடு

இயைந்தது தானே

இனிய வாழ்க்கை!



ஆயினும்

கடையாணியான

சுற்றுசூழல் கழன்று விட்ட பின்னும்

காலச்சக்கரம்

சுற்றிக்கொண்டு இருக்கிறது

இன்னும் வேகமாக!

Saturday, December 17, 2011

எதிர் திசைப்பயணம்




                                                     பயணங்களில்
                                                     கண்ணயர்ந்து
                                                     இடம்மாறி இறங்குகையில்
                                                     தவறிய பயணத்தின்
                                                     வலியை கூறுகிறது –
                                                     எதிர் திசைப்பயணம்!


\

Friday, November 4, 2011

மழை கவிதைகள் II

மழைக்கால நினைவுகள்



மழைத்தூறல்
நனைக்கையில் மண் வாசம்!

சிறுமழை
தெருவெங்கும் தேக்கிய நீரில்
கப்பலோட்டம்!

பெருமழை  குளிரில்
போர்த்திய கம்பளிக்குள்
முறுக்கு கடித்து கதை பேச்சு!

தொடர் மழை ‘சோ’வென
மனம் ‘ச்சே’வென்றாலும்
ரசிக்கவைக்கும் அலுப்பு!

மழைக்கு மனிதரின் கச்சேரியை விட
இனிய மழைக்கச்சேரி நடத்தும்
தவளை இசை!

குத்துக்காலிட்டு குளிர்குறைத்து
ஆவியுடன் காபியை விழுங்கியவாறே
கூடு கட்ட தெரியாத
குயிலை நினைத்து வருந்தும்
அந்த மழைக்காலத்திற்காகவே
எதையும் இழக்க
தயாராக இருக்கிறது மனம்!

                                       

Wednesday, November 2, 2011

மழை கவிதைகள்


                                                    சாமான்யன்

முழுதும்
சுமைகளில் அழுந்தியோ
சுகங்களில் தொலைந்தோ
போனவர்களிடம்
கேட்டுப்பாருங்கள்-
வாழ்க்கையைப் பற்றி!
மழையின் ஸ்பரிசத்தை
மறுநாள்
ஜுர வேதனையோடு
அனுபவிக்கும் ஆனந்தத்தை
அறியாதிருப்பர்!

Wednesday, April 27, 2011

இந்தியப் பெருமை



இது
மகாத்மா  தேசமாம்-
இருப்பினும்
கரண்சி வாசமே
இங்கு சுவாசமாய்!

இது
போதி மரங்களின் தோப்பாம்-
இருப்பினும்
போதையின் பிடியில்
பித்தர்கள்!

இது
மனுநீதி்ச் சோழனின் மண்ணாம்-
இருப்பினும்
முன்ஜாமீன்களும்
முடிவடையாத கமிஷன்களும்
ஆள்வோர்க்கு
வளையும் சட்டங்களும்!

இது
ஏகலைவர்கள் நாடாம்-
இருப்பினும்
எண்ணிலடங்கா
கல்லூரிகளும்
கழுத்தை நெறிக்கும்
கட்டணங்களும்!

இது
ஷாஜகான் மும்தாஜ்களின் நந்தவனமாம்-
இருப்பினும்
கண்மூடித்தனமான
காதல் ஈர்ப்புகளும்
காலம் கடந்த
அங்கலாய்ப்புகளும்!

எனினும்
இந்தியன் என்று சொல்வதில்
பெருமையாக தான் இருக்கிறது-
உதாரண புருஷர்கள் மட்டும்
ஒரு கோடி பேர் இருப்பதால்!

Thursday, April 21, 2011

அ.... ஆ.... போ....


இந்த பூமியில்
காற்று வீசுகிறது
மழை பொழிகிறது
அலைகள் அடிக்கின்றன
மலைகள் கூட அசையாதிருக்கின்றன 
 இதிலென்ன அதிசயம் என்கிறீர்களா?  
நான் தான் இவ்வுலகின் 
மகத்தான படைப்பு என
ஆட்டம் போட்ட
மனிதர்கள் இல்லை
மற்ற உயிரினங்கள் இல்லை
இவற்றுக்கு உயிர் முட்ட
சுவாசம்  தந்த மரங்கள் இல்லை
காரணம்
உலகில்
அ.. ஆ... போ...
அணு ஆயதப் போட்டி!


Sunday, February 6, 2011

நட்பு காலம்




கருப்போ சிவப்போ
நிறம் தெரியவில்லை
உயரமோ குள்ளமோ
உருவம் தெரியவில்லை
ஒன்றாக விளையாடி ஏற்பட்ட
காயத்தின் தழும்பு சொல்கிறது
நட்பு என்று
ஆம் இந்த வண்ணத்து பூச்சி  
பக்கத்து கூட்டு லார்வாக்களை
என்றும் மறக்காது