Friday, April 27, 2012

மீசைக்காரன்


“அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே

உச்சி மீது வானிடிந்து

வீழுகின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சம் என்பதில்லையே”

என்று

அந்த மீசைக்காரன் பாடி வைத்திருந்தாலும்

இந்த மீசைக்காரன்

உச்சி மீது வீழுகின்ற போது  மட்டும்

அச்சமாக தான் இருகின்றது!

ஆயினும்

பார்த்து அலறுங்கள்-

கரப்பான் பூச்சி பயந்துவிட போகின்றது!


மனசாட்சிக்கு  பயப்படும்

ஒவ்வொருவரும்

கரப்பான் பூச்சிக்கும் பயப்படுங்கள்-

ஏன் தெரியுமா?

மனசாட்சியும்

கரப்பான் பூச்சியும்

இருட்டில் தானே ஒளிந்திருந்து

அவ்வபோது எட்டிப் பார்க்கின்றன!

Sunday, April 22, 2012

இரவு வானம்


இரவு  வானம்
வேணும் எனக்கு!

முந்திரிகளால் அலங்கரிக்கப்பட்ட
கருப்பு கேக்
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

ஆயிரம் பற்களை காட்டி
சிரித்திடும் அழகு குழந்தை
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

கண்ணில்
கருவிழியும் உண்டு
வெண்விழியும் உண்டு
என்
இரவு வானம்
பார்வைகளை பதிவு செய்யும் கருவிழி
அது
கற்றுக் கொடுத்த
தொலைநோக்குப் பார்வைகள்
ஏராளம்!
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!

உண்மையில்
பொருட்களுக்கு நிறமில்லை
எனக் கூறும்
அந்த
இரவு வானம்
வேணும் எனக்கு!


எக்ஸ்கியூஸ்  மீ..,
உங்கள் செயற்கை விளக்குகளை
கொஞ்சம் அணையுங்களேன், பிளீஸ்
அப்படியே வெளியே வந்து
அண்ணாந்து பாருங்கள்
அந்த
விண்ணலங்கார விளக்குகளை !
இரவு வானம்
வேணும் எனக்கு!

அதெல்லாம் இருக்கட்டும்
அந்த
அயோக்கிய சூரியனை
யார் இப்போது
வரச் சொன்னது?
அசையாது
ஆயிரம் முனிவர்களிருந்த
தவத்தினை
கலைத்து விட்டானடா பாவி...
அந்த
 இரவு வானம்
வேணும் எனக்கு!