Friday, November 4, 2011

மழை கவிதைகள் II

மழைக்கால நினைவுகள்



மழைத்தூறல்
நனைக்கையில் மண் வாசம்!

சிறுமழை
தெருவெங்கும் தேக்கிய நீரில்
கப்பலோட்டம்!

பெருமழை  குளிரில்
போர்த்திய கம்பளிக்குள்
முறுக்கு கடித்து கதை பேச்சு!

தொடர் மழை ‘சோ’வென
மனம் ‘ச்சே’வென்றாலும்
ரசிக்கவைக்கும் அலுப்பு!

மழைக்கு மனிதரின் கச்சேரியை விட
இனிய மழைக்கச்சேரி நடத்தும்
தவளை இசை!

குத்துக்காலிட்டு குளிர்குறைத்து
ஆவியுடன் காபியை விழுங்கியவாறே
கூடு கட்ட தெரியாத
குயிலை நினைத்து வருந்தும்
அந்த மழைக்காலத்திற்காகவே
எதையும் இழக்க
தயாராக இருக்கிறது மனம்!

                                       

Wednesday, November 2, 2011

மழை கவிதைகள்


                                                    சாமான்யன்

முழுதும்
சுமைகளில் அழுந்தியோ
சுகங்களில் தொலைந்தோ
போனவர்களிடம்
கேட்டுப்பாருங்கள்-
வாழ்க்கையைப் பற்றி!
மழையின் ஸ்பரிசத்தை
மறுநாள்
ஜுர வேதனையோடு
அனுபவிக்கும் ஆனந்தத்தை
அறியாதிருப்பர்!